Prose and Poetry
உடற்கூறியல் அறையில் உடலாய் நான் - Sushmitha S - Batch of 2018
செங்கீற்று உள்வர என் அருகிலிருந்த
அசைவற்ற சகமனிதனைக் கண்டு வியந்தேனே!
அடர்காடாக இருந்த கருங்கூந்தல் இன்று
பராமரிப்பின்றி சருகாக காய்ந்து உதிர்ந்ததேனோ?
வண்ணங்களைப் பிரித்து பகுத்தறிந்த கண்கள்
வண்ணம் இழந்து காட்சி அளிப்பதேனோ?
இரவும்பகலும் அயராது உழைத்த மூக்கு
அயர்ந்து தன்பணி நிறுத்தி இளைப்புற்றதேனோ?
புகழ்ந்தும் பழித்தும் கிடந்த வாய்
தன் பச்சோந்தி தன்மையை மாற்றியதேனோ?
அறுசுவையுண்டு இசையின்றி ஆடிய நா
இன்று தன் ஆட்டத்தை நிறுத்தியதேனோ?
அணிகலன் அலங்கரிக்க பிரகாசித்த கழுத்து
பயிரில்லா வயலைப் போல வெறுமையாகியதேனோ?
பணத்தால் நிரம்பி வழிந்த கைகள்
இங்கே வெற்றுப் பாத்திரமாக இருப்பதேனோ?
பட்டாடை உடுத்தி நெகிழ்ந்த தேகம்
ஆண்பெண் பேதமின்றி உடையின்றி கிடப்பதேனோ?
காடுகரையெல்லாம் சுற்றித் திரிந்த கால்கள்
இப்படி வெடிப்புற்று பாலைவனமாக வறண்டதேனோ?
சாதி மதம் பதவியென பிதற்றியவர்கள்
அனைவரும் ஒன்றென சமமாக படுத்திருப்பதேனோ?
உலகமென்னும் நாடகமேடையில் அவ்வளவுதான் வாழ்க்கையென
புரிந்து அங்குள்ள உடலோடு
உடலாய் நானும் நின்றேனே!